• Register

Melur News

கணவருடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையம் முன்பு குழந்தைகளுடன் பெண் தர்ணா கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினார்

மேலூர் மகளிர் போலீஸ்நிலையம் முன்பு, ஒரு பெண் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி குழந்தைகளுடன் கொட்டும் மழையில் தர்ணா போராட்டம் செய்தார்.

தர்ணா போராட்டம்

மதுரையை அடுத்த ஒத்தக்கடையை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரின் மனைவி அழகுசெல்வி (வயது 45). இவர் நேற்று மேலூர் மகளிர் போலீஸ்நிலையம் வந்தார். பின்பு திடீரென தனது 2 குழந்தைகளுடன் கொட்டும் மழையில் நனைந்தபடி போலீஸ்நிலையம் முன்பு தரையில் உட்கார்ந்து தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அருகே இருந்த மாஜிஸ்திரேட் கோர்ட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். தகவலறிந்து வந்த மேலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தர்ணா போராட்டம் செய்த பெண்ணிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீஸ்நிலையத்திற்குள் அழைத்து சென்று விசாரித்தார்.

சேர்ந்து வாழ வைக்க வேண்டும்

அதில், எனது கணவர் ராமமூர்த்தி. எங்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவர் ஒத்தக்கடையில் வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் நானும் சேர்ந்து பணியாற்றி வந்தேன். இந்தநிலையில் எங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால், நீராஜா (4), ராகவ் (2) என்ற 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம்.

சமீபத்தில் எனது கணவர் தனது நண்பர்களின் பேச்சை கேட்டு கொண்டு, என்னை துன்புறுத்தி, நிறுவனத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார். தற்போது நான் குழந்தைகளுடன் மதுரை புதூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறேன். கணவர் வீட்டிற்கும் வருவதில்லை. இதுகுறித்து கேட்ட போது என்னை சித்ரவதை செய்து தரக்குறைவாக பேசி வருகிறார்.

ஆகவே என்னையும், குழந்தைகளையும் கணவருடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து இதனை புகார் மனுவாக எழுதி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் மேலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/12/02042337/Woman-with-children-sit-in-front-of-the-police-station.vpf

அரசு கண்மாயில் மணல் திருட்டு: ஜே.சி.பி. எந்திரம்-லாரி பறிமுதல்

மேலூரை அடுத்த கீழவளவு அருகே உள்ளது அட்டபட்டி. இங்குள்ள சமத்துவபுரம் பகுதியில் அரசு கண்மாய் உள்ளது. இங்கு சிலர் அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாண்டியன், தனிப் பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்மாய் பகுதியில் ஜே.சி.பி. முலம் லாரியில் சிலர் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து மணல் எடுக்க பயன்படுத்திய ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Source: http://www.maalaimalar.com/News/District/2016/10/26173657/1047245/Government-kanma-sand-theft-Jecipi-Machinetruck-seized.vpf

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook