• Register

Melur News

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு; மேலூரில் மவுன ஊர்வலம்; கடையடைப்பு

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, மேலூரில் அனைத்து தரப்பினரும் கடையடைப்பு செய்து, மவுன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மவுன ஊர்வலம்

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலூரில் நேற்று ஓட்டல்கள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், நகைக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்பு மாலை 4 மணிக்கு சந்தைபேட்டை என்னுமிடத்தில் இருந்து அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி வேறுபாடு, மதசார்பு இன்றி ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக சென்றனர்.

அதில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், இந்து முன்னணி வக்கீல்கள், டாக்டர்கள், லையன்ஸ் கிளப் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. சாமி தலைமையிலும், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், மாவட்ட அரசு கேபிள் டி.வி. ஒருங்கிணைபாளர் அய்யப்பன், ஆட்டோ, வாடகை கார் மற்றும் வேன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், ஓய்வு ஊதிய சங்கத்தின, மகளிர் சுய உதவி குழுவினர், சத்துணவு ஊழியர்கள், ஓட்டல் மற்றும் டீக்கடை ஊழியர்கள் உள்ளிட்டோர் கருப்பு கொடி அணிந்தும், ஜெயலிதாவின் படங்களை கையில் பிடித்தும் மவுனமாக ஊர்வலம் வந்தனர். பெரிய கடை வீதி, செக்கடிபஜார், கக்கன்சிலை வழியாக மேலூர் பஸ் நிலையத்திற்கு ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பெண்கள் கதறி அழுதனர்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/12/08235011/The-late-Chief-MinisterHer-deathIn-Melur-silent-processionBandh.vpf

தனுஷ் என் மகன் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் வழக்கு தொடர்ந்தவர் பேட்டி

நடிகர் தனுஷ் என் மகன் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் கூறினார்.

 

நடிகர் தனுஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் எங்களது மகன் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு(2017) ஜனவரி மாதம் 12–ந்தேதிக்கு தள்ளி வைத்து, அன்றைய தினம் நடிகர் தனுஷ் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாஜிஸ்திரேட்டு செல்வக்குமார் உத்தரவிட்டார். இந்தநிலையில் இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தன் மகன் என வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தற்போது பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் எனது மூத்த மகன் கலைசெல்வன். அவன், திருப்பத்தூர் அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்தபோது பாதியிலேயே படிப்பை கைவிட்டு விட்டு, திடீரென காணாமல் போய்விட்டான். அதன்பிறகு பல இடங்களில் அவனை தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், எனது மூத்த மகனான கலைசெல்வன் தான் தனுஷ் என்ற பெயரில் நடிகராக இருப்பதை பலர் சொல்ல கேட்டேன். இதனை தொடர்ந்து கடந்த 2002–ம் ஆண்டு முதல் அவரை பார்க்க முயன்றேன். ஆனால் நடிகர் தனுசை சுற்றி இருப்பவர்கள் என்னை தடுத்து விட்டனர்.

டி.என்.ஏ. பரிசோதனை

பலமுறை சென்னை சென்றும் எங்கள் மகனை எங்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தற்போது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த வழக்குக்கு தேவையான உரிய ஆதாரங்களின் அடிப்படையில் கலைச்செல்வன் என்ற தனுஷ் தான், எங்கள் மகன் என்பதை நிரூபிப்பேன். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டாலும் அதனை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/11/27005440/Dhanush-is-my-son--Prove-thatDNA-Testing-will--Following.vpf

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook