• Register

Melur News

மர்மகாய்ச்சல் பாதித்த நரசிங்கம்பட்டியில் மருத்துவக்குழு முகாம்

மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பாதித்து 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவது குறித்து ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த காய்ச்சலுக்கு ஊருக்கு நடுவில் உள்ள நொண்டிச்சாமி கோயில் குளம் கழிவு நீராக மாறி, கொசு உற்பத்தி ஆகும் இடமானதுதான் காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
 
தினகரனின் செய்தியை தொடர்ந்து நேற்று சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, கிராம ஊராட்சி இயக்குநர் என நரசிங்கபட்டியில் முகாமிட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேஸ், கிராம ஊராட்சி கூடுதல் இயக்குநர் லட்சுமி நேரில் ஆய்வு நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து தெற்குதெரு மருத்துவ அலுவலர் வசுமதி தலைமையில் காய்ச்சல் பாதித்த 80க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சந்தோஷம், சுந்தர், சுந்தரேஸ்வரன், ராஜேஷ்கண்ணா மற்றும் பகுதி சுகாதார செவிலியர் மாலா தலைமையில் 4 கிராம சுகாதார செவிலியர்கள் என 20க்கும் மேற்பட்டோர் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். மேலூர் யூனியன் பிடிஓக்கள் கலா மற்றும் ராஜலட்சுமி ஆய்வு செய்தனர். கழிவுநீர் குளம் குறித்து இவர்களிடம் கிராம மக்கள் புகாரை தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

 

Source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=660152

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு; மேலூரில் மவுன ஊர்வலம்; கடையடைப்பு

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, மேலூரில் அனைத்து தரப்பினரும் கடையடைப்பு செய்து, மவுன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மவுன ஊர்வலம்

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலூரில் நேற்று ஓட்டல்கள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், நகைக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்பு மாலை 4 மணிக்கு சந்தைபேட்டை என்னுமிடத்தில் இருந்து அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி வேறுபாடு, மதசார்பு இன்றி ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக சென்றனர்.

அதில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், இந்து முன்னணி வக்கீல்கள், டாக்டர்கள், லையன்ஸ் கிளப் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. சாமி தலைமையிலும், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், மாவட்ட அரசு கேபிள் டி.வி. ஒருங்கிணைபாளர் அய்யப்பன், ஆட்டோ, வாடகை கார் மற்றும் வேன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், ஓய்வு ஊதிய சங்கத்தின, மகளிர் சுய உதவி குழுவினர், சத்துணவு ஊழியர்கள், ஓட்டல் மற்றும் டீக்கடை ஊழியர்கள் உள்ளிட்டோர் கருப்பு கொடி அணிந்தும், ஜெயலிதாவின் படங்களை கையில் பிடித்தும் மவுனமாக ஊர்வலம் வந்தனர். பெரிய கடை வீதி, செக்கடிபஜார், கக்கன்சிலை வழியாக மேலூர் பஸ் நிலையத்திற்கு ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பெண்கள் கதறி அழுதனர்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/12/08235011/The-late-Chief-MinisterHer-deathIn-Melur-silent-processionBandh.vpf

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook