• Register

Melur News

தமிழக மக்களையும், கட்சியையும் காத்திட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக மக்களையும், கட்சியையும் காத்திட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மவுன அஞ்சலி

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம், திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் ரமேஷ் ஒன்றிய துனைச்செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதிச்செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:–

தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினார். அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதோடு, தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம்

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது., கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உற்ற தோழியாகவும், அவரது பொதுவாழ்விற்கு உற்ற துணையாகவும் இருந்து வருபவர் சசிகலா. 2 கோடி கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தமிழக மக்களையும் காத்திட தகுதியானவர் சசிகலா தான். எனவே அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டு கொள்கிறது.

இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுன. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், மேலூர் சாமி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், பகுதி துணைசெயலாளர் ஐ.பி.எஸ். பாலமுருகன், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வடபழஞ்சி தனிக்கொடி, தனக்கன்குளம் கருத்தக்கண்ணன், சாக்கிலிபட்டி பாலமுருகன், வட்ட செயலாளர்கள் திருநகர் பாலமுருகன், பொன்முருகன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/12/12231134/People-of-Tamil-Nadu-partyGuard-Digg-General-SecretaryShashikala.vpf

மேலூர் அருகே கார்த்திகை திருவிழா மணலை மலை போல குவித்து வழிபடும் வினோத வழிபாடு

மேலூர் அருகே நேற்று மணலை மலை போல குவித்து வழிபடும் வினோத கார்த்திகை திருவிழா நடைபெற்றது.

கார்த்திகை திருவிழா

மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ளது மலைச்சாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வருடத்திற்கான விழா நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கோவிலில் உள்ள சாமிக்கு உருவ வழிபாடு இல்லை. பெருமாள் நின்று காட்சியளித்த படிக்கட்டுகளில் தான், பொது மக்கள் மாலைகள் வைத்து வணங்கி வருகின்றனர்.

மணல் மலை

இந்த கோவிலின் முன்பாக சேங்கை எனப்படும் தீர்த்தக்குளம் உள்ளது. சாமி தரிசனத்திற்கு முன்பு இந்த குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு, குளத்து மணலை 3 தடவை கையால் அள்ளி கொண்டு போய், கோவில் அருகே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டு வினோத வழிபாடு செய்வார்கள். இவ்வாறு செய்தால், தாங்கள் நினைத்தது நிறைவேறும், நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பிட்ட அந்த இடத்தில் போட்ட மணல் தற்போது 50 அடி உயரத்துக்கு பெரிய மலை போல நிரந்தர மணல் மலையாக அமைந்துவிட்டது. மழை காலங்களில், பெருமாள் மலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் மழை வெள்ளத்தின் போதும் கரையாமல், இந்த மணல் மலை அப்படியே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சேங்கை வெட்டுதல்

பக்தர்கள் குளத்து மணலை எடுத்து மணல் மலை மீது போட்டு செய்யும் வினோத வழிபாடு சேங்கை வெட்டுதல் என்று அழைக்கப்படுகிறது. குளத்தை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த சேங்கை வெட்டும் நிகழ்ச்சி மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கார்த்திகை விரதம் இருக்கும் பக்தர்கள், திருவிழாவின் போது சேங்கை குளத்தில் படர்ந்து கிடக்கும் தாமரை இலைகளை பறித்து சென்று வீட்டில் சாமி கும்பிட்டு, உணவு சாப்பிடும் விரதம் விடும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.

மேலூர் பகுதி விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த கரும்புகளை முதலில் இந்த கோவிலில் கொண்டு வந்து விற்பனை செய்வது ஐதீகம். பக்தர்கள் இந்த கரும்புகளை கோவில் பிரசாதமாக கருதி போட்டி போட்டு வாங்கி செல்வது வழக்கம். அதுபோல நேற்றும் கரும்பு விற்பனை அதிக அளவு நடைபெற்றது. இந்த விழாவிற்காக மேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் அதிக அளவு இயக்கப்பட்டன. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/12/12230833/Near-Melur--Nov-festival--As-the-sand-hillAmassed.vpf

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook