• Register

மெட்ரிக் பள்ளி சேர்க்கைக்கு பாரபட்சம் பெற்றோர், மாணவர்கள் சாலை மறியல்

மேலூர் அருகில் உள்ள ஆட்டுக்குளத்தில் எஸ்.எஸ்.வி. சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதே நிர்வாகத்தின் கீழ் எஸ்.எஸ்.வி. மெட்ரிக் தொடக்கப்பள்ளி மேலூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு 5–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஆட்டுக்குளத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பில் சேர சீட் கேட்டு வருகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சீட் தர மறுக்கப்படுகிறது.

ஒரே பெயரில் இந்த பள்ளிகள் இயங்கினாலும், தனித்தனி நிர்வாகிகளால் செயல்பட்டு வருகின்றன. அதில் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை காரணமாக மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதை அறியாத பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க ஆண்டு தோறும் முட்டி மோதுகின்றனர். இந்தநிலையில் பெற்றோர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக தொடக்கப் பள்ளியில் இருந்து 60 மாணவர்களை மட்டும் மேல்நிலைப்பள்ளியில் சேர்ப்பதாக கூறப்பட்டது. அவர்களையும் குலுக்கல் முறையில் மட்டுமே தேர்தெடுப்பதாக கூறி நேற்று டோக்கன் வழங்கப்பட்டது.

சாலை மறியல்

அதில் 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள் டோக்கன் பெற்று 6–ம் வகுப்பு சேர்க்கைக்கு வந்தனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு அட்மி‌ஷன் கிடையாது என கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து தங்களை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மேலூர்–சிவகங்கை ரோட்டில் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலூர் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பள்ளி வளாகத்திற்குள் அழைத்து சென்றார்.

அங்கு பள்ளி கல்வி துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு அட்மி‌ஷனுக்காக வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டது. இதே பள்ளியில் எல்.கே.ஜி முதல் 10–ம்வகுப்பு படித்த மாணவர்களுக்கு, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கான அனுமதி மறுப்பதாகவும் பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பெற்றோர், மாணவர்கள் நடத்திய சாலை மறியலால் சிவகங்கை ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/2017/05/06023730/Discrimination-for-matriculation-schoolParents-and.vpf

Add comment


Security code
Refresh

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook