• Register

மேலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு பின்பு 18 பட்டி கிராமங்கள் சார்பில் மஞ்சுவிரட்டு


மேலூரில் 18 பட்டி கிராம காஞ்சிவனம் கோவில் சார்பாக ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மஞ்சுவிரட்டு நாளன்று 18 கிராமங்களிலும் ஒரே நேரத்தில் 18 இடங்களிலும் காளைகள் அவிழ்த்து விடப்படும். அந்த காளைகள் அனைத்தும் மேலூரில் அனைத்து வீதிகளிலும் ஓடுவது வழக்கம். 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

15 ஆண்டுகளுக்கு பிறகு வளர்ச்சி பெற்ற மேலூரில் தற்போது பழமையான வழக்கப்படி 18 இடங்களில் காளைகளை அவிழ்த்துவிட்டால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே ஒரே இடத்தில் காளைகளை அவிழ்த்து விட வேண்டும் என விழா ஆலோசனை கூட்டத்தில் மேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி 18 பட்டி அம்பலகாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுகொண்டு 200 ஏக்கர் பரப்பளவுள்ள மாத்திக்கண்மாயில் மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது.

முன்னதாக மேலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள காஞ்சிவனம் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து பாரம்பரிய வழக்கப்படி 18 பட்டி கிராம அம்பலக்காரர்களும், இளங்கட்சிகளும் கடுமையான விரதம் இருந்து மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மரியாதைகள் செலுத்த, ஜவுளிகளை தலையில் சுமந்து மாத்திகண்மாய்க்கு ஊர்வலமாக நடந்து சென்றனர்.

அங்கு காளைகளுக்கு மரியாதைகள் செய்யப்பட்டு முறைப்படி திறந்த வெளியில் மஞ்சுவிரட்டு தொடங்கியது. மாத்திக்கண்மாயில் நான்குபுறமும் இருந்து கோவில் காளைகள் உள்பட சுமார் 600 காளைகள் சரமாரியாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் கடும் போட்டிகளுக்கிடையே காளைகளை விரட்டி மடக்கி பிடித்து மகிழ்ந்தனர். இதில் காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கானோர் கண்டுகளித்தனர்.

 

Source: http://www.dailythanthi.com/News/Districts/2017/04/11235747/After-15-years-of-near-MelurOn-behalf-of-the-18-villages.vpf

Add comment


Security code
Refresh

Melur Links

Get it on Android Playstore

Likeus On Facebook