• Register

மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலத்தில் நீச்சல்குளம் அமைப்பது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தரராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கிராமங்களில் உள்ள இளைஞர்கள் அங்குள்ள கண்மாய், குளங்களில் நண்பர்களுடன் சென்று நீச்சல் பயிற்சி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன.

இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் நீச்சல் பயிற்சி பெற முடியவில்லை. மதுரை மாநகராட்சியில் ஒரே ஒரு நீச்சல் குளம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கு வந்து நீச்சல் பயிற்சி பெறுவது சாத்தியம் இல்லை.

எனவே நீர் நிலைகளில் தண்ணீர் இருந்தாலும், இல்லை என்றாலும் ஆண்டு முழுவதும் கிராமப்புற இளைஞர்கள் நீச்சல் பயிற்சி பெறும் வகையில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் ஆகிய நகராட்சி பகுதிகளில் அரசு சார்பில் நீச்சல் குளம் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அதிகாரிகள் 4 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2019/01/10040407/The-court-ordered-to-consider-the-suspension-in-Melur.vpf

மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு நிறைமாத கர்ப்பிணி பலி; பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு

மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாகவே பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் மேலூர் அருகே உள்ள சாலக்கிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி. எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வீரசிகாமணி. இவர்களுக்கு தாருன்யாஸ்ரீ, தன்யாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் தற்போது வீரசிகாமணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. அதன்பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வீரசிகாமணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

மர்ம காய்ச்சல் பாதிப்பால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சாலக்கிப்பட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2018/11/20020031/Mystery-fever-kills--pregnant-woman.vpf

பயிர் சேத விபரங்களை மதிப்பீடு செய்யாததாக வாக்குவாதம் கலெக்டர் முன்னிலையில் கூச்சல், குழப்பம்

கஜா புயலின் போது மேலுார் தாலுகாவில் பல பகுதிகளில்

பயிர் சேத விபரங்களை மதிப்பீடு செய்யாததாக கலெக்டர் நடராஜன் முன்னிலையில் வேளாண் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில்

ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., குணாளன், வேளாண் இணை இயக்குனர் குமாரவடிவேல், கலெக்டரின் நேர்முக

உதவியாளர்(விவசாயம்) முத்தம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் பூபதி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் தீபசங்கரி, பொதுப்பணித்துறை கோட்ட செயற் பொறியாளர் (நீர்வள ஆதாரம்)

சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில் நடந்த

விவாதம்...

ராமன்: திருமங்கலம் விரிவாக்க கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே கண்மாய்கள் நிரம்பும். செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் பெரிய கண்மாய் மூன்று மடை வழியாக செல்லும் கால்வாய்கள் துார்ந்துள்ளதால் தண்ணீர் விளைநிலங்களுக்கு செல்வதில்லை.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்: வைகை அணையிலிருந்து முடிந்தளவு கூடுதல் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இக்கால்வாயிலும் கூடுதல் தண்ணீர் விடப்படும்.

திருப்பதி: ரிசர்வ்லைன் அருகே தண்டலை கால்வாய் முழுவதும்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் இக்கால்வாய் வழியாக வெளியேறும். 1993ல் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும், ஆக்கிரமிப்புகளாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கலெக்டர்: ஆக்கிரமிப்பு அகற்றாத நாளே இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். முக்கிய நீர்நிலை ஆக்கிரமிப்பு விரைவில் அகற்றப்படும். இதுகுறித்து வெளிப்படையாக தெரிவிக்க இயலாது.

வண்டியூர், செல்லுார் கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் தண்ணீர் தேங்கியுள்ளன.

மணிகண்டன்: உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் இருமுறை தண்ணீர் சோதனை ஓட்டமாக விடப்பட்டது. இக்கால்வாய் செல்லம்பட்டியிலிருந்து அய்யம்பட்டி கண்மாய் கால்வாயில் அடைப்புள்ளது. வரத்து கால்வாய்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கால்வாயால் பயன்பெறும் 33 கண்மாய்களை அடையாளம் காட்ட வேண்டும்.பொதுப்பணித்துறை பொறியாளர்: வைகை அணையில் 69 அடிக்கு மேலும், ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பிய பிறகும் 58 கிராம

கால்வாயில் தண்ணீர்

திறக்கப்படும். கால்வாய்கள் துார்வாரப்படும்.

பழனிச்சாமி: மேலுார்

கச்சிராயன்பட்டியில் குவாரி செயல்படுகிறது. இதில் வெடிபொருட்களை வைத்து வெடிப்பதால் சிங்கம்புணரி கால்வாய் சேதமடைந்துள்ளது. குவாரியை தடை செய்ய வேண்டும்.

கலெக்டர்: இதுகுறித்து விசாரிக்கப்படும்.ராமன்: சேடப்பட்டியில் சிப்காட் அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்தார். நிலங்களை கையகப்படுத்த

சாத்தியமில்லை என அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். ஜெ., அறிவிப்பை நிறைவேற்றவில்லை எனில் அவரது பாவத்தை

சம்பாதிக்க நேரிடும்.

கலெக்டர்: இதுகுறித்து சிட்காட், சிட்கோ நிர்வாகங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

அழகு: பனையூரில் துணை மின் நிலையம் அமைத்த பின் மின் சப்ளை சீராக இல்லை.

மின்வாரிய அதிகாரிகள்: மின் சப்ளை சீராக இருக்க தான் மின் நிலையம் அமைக்கப்பட்டது.

சடையாண்டி: பேரையூர் பகுதியில் காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

வேளாண் இணை இயக்குனர்: காப்பீடு செய்த விதைக்க முடியாத விவசாயிகளுக்கு 4.29 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

கூட்டுறவு இணை பதிவாளர்: 2016--17ம் நிதியாண்டில் 987 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 2017--18ம் நிதியாண்டிற்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்தும் நிவாரணம் வழங்கப்படும். (சில விவசாயிகள் பிரிமியம் செலுத்தியும் மற்ற

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என குரல் எழுப்பியதால்

கூச்சல் குழப்பம் ஏற்பட்டது).கலெக்டர்: விவசாயிகள் நெல் பயிருக்கு இம்மாதம் 30ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய பதிவு செய்யலாம். மற்ற பயிர்களை காப்பீடு செய்ய அவகாசம்

உள்ளது. பயிர் காப்பீடு செய்த அனைவருக்குமே வழங்கப்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ணன்: புயல் சேதத்தின் போது போலீசார் குழு அமைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர்கள் குழு அமைக்கவில்லை. சாம்பிராணிப்பட்டியில் புயல் சேத விபரங்களை முழுமையாக சேகரிக்கவில்லை.

கலெக்டர்: தவறான தகவல் தரக்கூடாது. வருவாய் அலுவலர்கள் குழு அமைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். வேளாண், தோட்டக்கலை அதிகாரிகளை கொண்ட குழு தான் கிராம வாரியாக பயிர் சேத விபரங்களை மதிப்பீடு செய்துள்ளது.

மலைச்சாமி: அ.வள்ளாலப்பட்டி, சாம்பிராணி

பட்டியில் பயிர் சேத விபரங்களை பெறவில்லை.

தோட்டக்கலை துணை இயக்குனர்: ஒரு கிராமம் விடாமல் பயிர் சேத

விபரம் உள்ளது. விவசாயிகள் பெயர், சேத விவரம் உள்ளன.

கலெக்டர்: விடுபட்டவர்கள் அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் பயிர் சேத விபரங்களை தெரிவித்து பதிவு செய்யலாம்.ஆனாலும் விவசாயிகள் அதை கேட்காமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின் போலீசார் சென்று விவசாயிகளை அமர வைத்தனர். முன்னதாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=2152304

மேலூர் பகுதியில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை திறக்க கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த கிரானைட் குவாரிகள் மற்றும் கிரானைட் தொழிற்சாலைகள் அனைத்தும் கிரானைட் முறைகேடு வழக்குகள் தொடர்பாக கடந்த 2013–ம் ஆண்டு மூடப்பட்டன. மேலூர் மற்றும் மதுரை கோர்ட்டுகளில் 100–க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தநிலையில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க கோரி தமிழ்நாடு கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அவை சார்ந்த தொழிலாளர் நல சங்கத்தினர் நேற்று மேலூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநில தலைவர் பொற்கைபாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர்.

 

போராட்டத்தின்போது மாநில தலைவர் பொற்கை பாண்டியன் பேசியதாவது:–

மேலூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யபட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை நமது நாட்டுக்கு கிரானைட் குவாரிகள் பெற்று தந்தன. இதன்மூலம் மத்திய–மாநில அரசுகளும், மதுரை மாவட்ட நிர்வாகமும் மக்களின் வளர்ச்சி பணிகளுக்கு அவற்றை பயன்படுத்தின. இந்தநிலையில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி மேலூர் பகுதியில் செயல்பட்ட 147 கிரானைட் குவாரிகள் மூடப்பட்டன. 84 குவாரிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட்ட அன்னிய செலவாணி பாதிக்கப்பட்டதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கான கிரானைட் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டனர். வறுமையினால் கிரானைட் தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

கிரானைட் குவாரிகள் மீதான வழக்குகளின் மீதான விசாரணைகளை போர்க்கால அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். மூடிக்கிடக்கும் அனைத்து கிரானைட் குவாரிகளையும், கிரானைட் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள கிரானைட் தொழிலாளர்கள் அனைவரையும் திரட்டி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2018/11/14045328/Workers-fasting-demand-to-open-the-granite-quarry.vpf

கொட்டாம்பட்டியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் அவதி; சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கொட்டாம்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஏராளமான மரங்கள் விழுந்ததில் கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 டிரான்ஸ்பார்மர் உள்பட 50–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மறு சீரமைப்பு பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பம், கம்பிகளை சீரமைத்து வருகின்றனர். ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இந்தநிலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் நேற்று 3–வது நாளாக மின்தடை தொடர்ந்ததால், மின்சாரம் இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று நேற்று மின்கம்பங்களை விரைந்து சீரமைத்து மின்சாரம் வழங்க கோரி காரைக்குடி–திண்டுக்கல் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் விரைந்து சீரமைக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2018/11/19015311/The-continued-resistance-kottampatti.vpf

மேலூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் சேதம்; விவசாயிகள் வேதனை

பெரியாறு, வைகை அணைகளின் நீர் பாசனத்தின் ஒரு போக கடைசி பகுதி மேலூர் தாலுகா ஆகும். இங்கு படிந்துள்ள வண்டல் மண் உரத்தால் கரும்பு மற்றும் வாழை பயிர்கள் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் மேலூர் பகுதியில் விவசாயிகள் பொங்கல் கரும்புகளை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். மேலும் குஜராத், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சங்கரஹாந்தி(பொங்கல்) விழாவிற்கு மேலூர் பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அதிக அளவில் கரும்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு ஏற்றுமதிக்காக பயிரிடப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொங்கல் கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சமீபத்தில் வீசிய கஜா புயலால் ஒட்டுமொத்தமாக ஒடிந்து சாய்ந்து சேதமடைந்துவிட்டன.

 

எட்டிமங்கலம், புதுசுக்காம்பட்டி, பழையசுக்காம்பட்டி, சூரக்குண்டு, கல்லம்பட்டி, அ.வல்லாளபட்டி, சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, நாவினிப்பட்டி, கூத்தப்பன்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகள் சாய்ந்து முழுமையாக சேதமடைந்தன. இதேபோன்று மேலூர் பகுதியில் வாழைகளும் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

விவசாயிகள் கூறும்போது, அதிக வட்டிக்கு கடன் வாங்கி கரும்பு, நெற்பயிர்களை சாகுபடி செய்தோம். ஆனால் கஜா புயலால் கரும்பு, வாழை மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்கள் ஒட்டுமொத்தமாக சேதமடைந்துள்ளன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக முழு நிவாரணம் வழங்குவதுடன், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2018/11/19015310/Melur-areaHarvesting-of-the-canes-which-were-ready.vpf

சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு கோரி வழக்கு; தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக திருச்சி வரையிலான சாலையை தேசிய நெடுஞ்சாலை 45 ‘பி’ என அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கிருந்து துவரங்குறிச்சி பூதக்குடி சுங்கச்சாவடி வரை மொத்தம் 92 கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு ரூ.80 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இந்த சுங்கச்சாவடி வழியாக மேலூர், திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கும் ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு கடந்த 2013–ம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் தற்போது வரை இந்த உத்தரவை சுங்கச்சாவடியில் கடைபிடிக்கப்படவில்லை. முழு கட்டணம் வசூலிக்கின்றனர். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மதுரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மதுரைக்கு வருவதற்கு இந்த தேசிய நெடுஞ்சாலையை தவிர வேறு வழியில்லை.

எனவே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி வழியாக திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் ‘‘இந்த மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வருகிற 26–ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் 27–ந்தேதி அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2018/11/19015314/Citambatti-cargo-case-demanding-tariff-exemption.vpf

 

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த போது டயர் வெடித்தது; லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகரடியூரை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் மணிகண்டன் (45). லாரி டிரைவரான இவர், பெங்களூரில் இருந்து பாலிஷ் செய்யபட்ட கிரானைட் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்துள்ளார்.

லாரி கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பட்டி விலக்கு மதுரை– திருச்சி நான்கு வழி சாலையில் வரும்போது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியை அருகே இருந்த கடைகள் மற்றும் பொதுமக்கள் மீது மோதாமல் தடுக்க போராடி 500 மீட்டர் தூரம் சாலையை விட்டு விலகி டிரைவர் ஓட்டியதால் லாரி 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரியும், கிரானைட் கற்களும் நொறுங்கின. இதில் சிக்கிய டிரைவர் மணிகண்டன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் மேலூர் தீயணைப்பு வீரர்கள், தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி.எந்திரம் மூலம் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மணிகண்டன் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Source: https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08231847/The-lorry-loaded-with-granite-stones-droppedDriver.vpf

ஹால்டிக்கெட்டை மறந்த மேலூர் மாணவி! கார் டிரைவர் செய்த உதவி!

மேலூர் சூரக்குண்டு பகுதியைச்சேர்ந்த மாணவி டயானா. இவருக்கு பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.  இதற்காக இன்று காலையில் அவர் தனது தாயார் தனலட்சுமியிடன் கல்லூரிக்கு வந்தார்.   தேர்வு மையத்திற்குளு சென்றபோதுதான் தனது ஹால்டிக்கெட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது.  

 

இதனால் டயானா கண் கலங்கினார். தாயார் வேதனை அடைந்தார்.  இதைக்கண்ட கார் டிரைவர்  மணி என்பவர், டயானாவை காரில் அழைத்து சென்று மின்னல் வேகத்தில் 55 கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் கடந்து தேர்வு மையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்.  இதனால் டயானா மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத சென்றார்.  தனலட்சுமி கொடுத்த பணத்தையும் வாங்காமல், தக்க சமயத்தில் உதவி செய்த டிரைவர் மணியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

 

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/forgotten-student-hollywood-car-driver-assisted

மணல் லாரிகள் சிறைபிடிப்பு

மேலுார் சின்னசூரக்குண்டு மேலுாரிஞ்சி கண்மாயில் மணல் அள்ளிய

ஆறு லாரிகளைஇளைஞர்கள் சிறைபிடித்தனர்.கண்மாயிலுள்ள ஆழ்குழாய் மூலம் மேலுாரின் சில பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. கண்மாயில் நேற்று காலை சட்ட விரோதமாக சிலர் மணல் அள்ளினர். அங்கு சென்ற கிராம இளைஞர்கள் ஆறு லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை சிறைபிடித்தனர். ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., ரவிச்சந்திரபிரபு, எஸ்.ஐ., சிவபாலனிடம் லாரி உரிமையாளர்கள் பொதுப்பணித்துறையின் அனுமதி சீட்டை காட்டினார்.

 

அதில் மணல் அள்ளப்படும், கொண்டு செல்லப்படும் விவரங்கள் இல்லை. இதனால் விவசாயத்திற்கு அள்ள அனுமதி பெற்று விற்க கொண்டு செல்வதாக இளைஞர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் பேசி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. பின் லாரிகள் விடுவிக்கப்பட்டன.

 

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=2015732

Melur Links

Get it on Android Playstore